நான் சிறைக்குச் சென்றபோது எனக்கு 19 வயது. ஓடித் திரியக்கூடிய வயது. எல்லா மனிதர்களும் அந்த வயதில் என்ன ஆசாபாசங்களோடு இருப்பார்களோ, அதே ஆசாபாசங்களோடு தான் நானும் இருந்தேன்.
திடீரென இந்த வழக்கில் சேர்க்கப்பட்டபோது, ஒரு அறைக்குள் நான் முடக்கப்பட்டேன். இதனால், இயல்பாகவே மன அழுத்தம், வேதனை, விரக்தி என எல்லாமே இருந்தது. அதைக் கடக்க என்னுடைய குடும்பம் மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது. குறிப்பாக என் தாயாரின் பணியை இன்று உலகமே அறியும். அதைத் தாண்டி என்னை மீட்டது என்னுடைய வாசிப்புப் பழக்கம்தான். எனக்குப் பிடித்த புத்தகங்களைப் படிப்பதன் மூலம், என் கவனத்தை நான் திசை திருப்பிக்கொண்டேன். துன்பத்திலிருந்து மீள்வதற்கு அப்படித்தான் தகுதிப்படுத்திக் கொண்டேன்.
என் குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து, என் அம்மா எனக்காக இந்த வழக்கைப் பார்த்துக்கொள்வது என முடிவெடுத்தார்கள். ‘தன்னுடைய மகன் நிரபராதி' என்ற ஒரே நம்பிக்கைதான் என்னுடைய தாயை இயக்கிய ஒரே விஷயம்.
அம்மா தன் தரப்பிலிருந்து நம்பிக்கையூட்டும் வாக்கியங்களைச் சொல்வார். ‘அவரைப் பார்த்தேன், ஆதரவாக இருந்தார், இதைச் சொன்னார்‘ என்றுதான் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டுவார். அதுபோலத்தான் நானும் பேசுவேன். ‘பார்த்துக்கொள்ளலாம், சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம். பழைய தீர்ப்புகள் இருக்கின்றன' என்று பேசுவேன். இப்படித்தான் எங்களுக்கு இடையிலான உரையாடல் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவராகவும் இருந்தோம். உற்சாகத்தைக் குறைப்பதுபோல பேசவே மாட்டோம்.
சிறையில் யாரையாவது அம்மாக்கள் பார்க்க வந்தால் பத்து நிமிடம் பேசுவார்கள். ஆனால், நானும் எனது அம்மாவும் மணிக் கணக்காக உட்கார்ந்து பேசுவோம். ‘நீயும் உங்கம்மாவும் உட்கார்ந்து என்னதாண்டா பேசுறீங்க‘ன்னு அதிகாரிகள் கேட்பார்கள்.
எல்லா விஷயத்தையும் அம்மா பேசுவார்கள். திடீரென பஸ் டிக்கெட் விலை ஏற்றத்தைப் பற்றிச் சொல்வார். 'அங்கே ஒரு மரம் இருந்ததல்லவா, அந்த மரத்தை வெட்டிவிட்டார்கள்' என்பார். ஒரு பேருந்தில் வரும்போது இதைப் பார்த்தேன் என்று சொல்வார். தேநீர் விலை ஏறிவிட்டது என்பார். அப்படிச் சொல்வதன் மூலம், வெளி உலகத்தை அப்படியே சித்திரமாக வரைந்து காண்பிக்க விரும்புவார். அப்படி ஒரு ஆசையும் ஆதங்கமும் அவருக்கு இருந்தது. தன் மகன் பார்க்காத வெளி உலகத்தை அவனுக்கு அப்படியே காட்ட வேண்டுமென விரும்பினார்.
நான் நிரபராதி என்று மனப்பூர்வமாக நம்பியதால்தான் 31 ஆண்டுகாலம் என்னால் போராட முடிந்தது. நான் தோற்றுவிடக் கூடாது என்ற வைராக்கியத்தை அதுதான் தந்தது. நான் நிரபராதி என்று கூறப்பட்டு வெளியில் வந்திருக்கிறேனா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அதுதான் உண்மை.
நீதிமன்றங்களில் அப்படித்தான் வாதாடினேன். ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் எழுதிய கருணை மனுக்களிலும் அப்படித்தான் குறிப்பிட்டேன்.
கருணை மனு அனுப்பினாலே குற்றத்தை ஏற்றதாகக் கருதுகிறார்கள். ஆனால், நான் நிரபராதி என்று கூறித்தான் கருணை மனுக்களை அனுப்பியிருக்கிறேன். அதை அவர்கள் ஏற்கிறார்களோ, ஏற்கவில்லையோ, முதல் நாளில் இருந்து இப்போதுவரை அதுதான் என் நிலைப்பாடு.
இப்போது வெளியில் வந்திருக்கிறேன். 31 ஆண்டுகள் கழித்து வந்திருப்பதால் எல்லாம் திரைபோட்டு மறைத்திருப்பதைப் போல இருக்கிறது. முதலில் இந்த உலகத்தை நான் பார்க்க வேண்டும். எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை.
(நன்றி: பிபிசி தமிழுக்கு பேரறிவாளன் அளித்த பேட்டியிலிருந்து)
ஜூன், 2022